×

நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ண வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும். அரைமணி நேரம் கழித்த பின்பு தான் மின்னணு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இதுதான் தேர்தல் நடத்தை விதிமுறை. இந்த நடைமுறையில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. தேர்தல் ஆணையமும் இதனை பின்பற்றி வருகிறது. ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையரான சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுக்கள் கடைசியாக எண்ணப்படும் என்று கூறி இருக்கிறார். இது சரியான நடைமுறை அல்ல. இந்த அறிவிப்பு, வேட்பாளர்களின் முகவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் முறையாக தெரிவிக்க வேண்டும். அதன்படி, வாக்கு எண்ணும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட வேண்டும். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட வேண்டும். அதன்பின் அரைமணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். இறுதியாக, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை அறிவிக்கும் முன்பு தபால் ஓட்டு முடிவுகளை அறிவித்து நேர்மையான, வெளிப்படையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ண வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,RS Bharati ,Tamil ,Nadu ,Satyapratha Sahu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...