×

குமரியில் தியானம் செய்யும் தெய்வப்பிறவி காதில் வாங்கும் நிலையில் இல்லை: மோடி மீது அமைச்சர் துரைமுருகன் தாக்கு

வேலூர்: ‘குமரியில் தியானம் செய்யும் தெய்வப்பிறவி காதில் வாங்கும் நிலையில் இல்லை’ என்று மோடியை தாக்கி அமைச்சர் துரைமுருகன் பேசி உள்ளார். வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ளார். இதுபற்றி அரசியல் விற்பன்னர்கள், அரசியல் தெளிவுபெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் மோடியின் தியானம் குறித்து குறை கூறி இருக்கின்றனர். அவரது தியானம் குறித்து எங்களுக்கு அக்கறையில்லை. ஜூன் 1ம் தேதி (இன்று) இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் மோடியின் தியானம் ஒரு இம்பேக்ட் ஏற்படுத்தக்கூடும்.

இது தேர்தல் விதியை மீறியதாகும். வாக்கு கேட்கும்போது ஒரு மதத்தையோ, மதச்சார்பையோ, அதற்கான செய்கையையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கக்கூடாது என்பது உத்தரவு. அதனால்தான் மோடி, இதுபோன்று மக்களிடம் மறைமுகமாக பிரசாரம் செய்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதை காதில் வாங்குகின்ற நிலையில் மோடி இல்லை. காரணம், அவர் மனிதனாக இருந்தால் காதில் விழும். அவர் ஓர் தெய்வப்பிறவி. அதெல்லாம் அவருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது’
அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘கர்நாடகத்தை பொறுத்தவரை அவர்கள் மேகதாது அணையை கட்டுகிறேன் என்றுதான் சொல்வார்கள். நான் திட்டவட்டமாக கட்ட முடியாது என்று சொல்லுகிறேன். தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்றி அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. இவ்விஷயத்தில் திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகம் அணை கட்டுவது என்றால், ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்றுதான் சொல்வார்கள். ஆகவே அங்கு இது ஒரு அரசியல். அந்த மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் பூகம்பம் கிளம்புகிறதோ, அப்போதெல்லாம் இதுபற்றி பேசுவார்கள்’ என்றார்.

The post குமரியில் தியானம் செய்யும் தெய்வப்பிறவி காதில் வாங்கும் நிலையில் இல்லை: மோடி மீது அமைச்சர் துரைமுருகன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Minister Durai Murugan ,Modi ,Vellore ,Minister ,Duraimurugan ,God ,Durai Murugan ,Kanyakumari ,
× RELATED திராவிட கொள்கைதான் இனி தமிழகத்தின்...