×

சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு: துணை மேயர் பதவிகளையும் திமுக கூட்டணி பிடித்தது

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் உள்பட 21 மாநகராட்சிகளில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர்கள் அந்தந்த மாநகராட்சிகளில் மேயர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில், 16 இடங்களில் போட்டியின்றியும், 5 இடங்களில் போட்டியிட்டும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேயர் பதவியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, பிற்பகல் நடைபெற்ற துணை மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் 12,819 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8வது வார்டில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாநகராட்சி உள்பட 6 வார்டுகளில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் கடைசி நேரத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற 12,819 வார்டு கவுன்சிலர்களும் கடந்த 2ம் தேதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று (4ம் தேதி) நடைபெற்றது. முன்னதாக, மேயர், துணை மேயர் மற்றும் தலைவர்கள், துணை தலைவர்களுக்கு போட்டியிடும் கவுன்சிலர்கள் அந்தந்த மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் மறைமுக தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததுடன், வாக்குப்பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால், 21 மாநகராட்சி, 137 நகராட்சி மற்றும் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் இருந்தது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட 20 மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் என்பது திமுக சார்பில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. அதேபோன்று துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் ஆகிய பதவிக்கு திமுக தலைமை கழகம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர்களுக்கான இடங்களும் திமுக தலைமை அறிவித்து இருந்தது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்காக சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக பிரியா  போட்டியின்றி வெற்றி பெற்றதாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் (திமுக), மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி (திமுக), திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன் (திமுக), கோவை மேயராக கல்பனா (திமுக), திருப்பூர் மேயராக தினேஷ்குமார் (திமுக), ஈரோடு மேயராக நாகரத்தினம் (திமுக), தூத்துக்குடி மாநகராட்சி மேயராக என்.பி.ஜெகன் (திமுக), ஆவடி மாநகராட்சி மேயராக ஜி.உதயகுமார் (திமுக), தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி (திமுக), வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா (திமுக), கரூர் மாநகராட்சி மேயராக கவிதா (திமுக), திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி (திமுக), சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா (திமுக), கும்பகோணம் மாநகராட்சி மேயராக சரவணன் (காங்கிரஸ்) உள்பட 16 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட திமுக மற்றும் காங்கிரசை சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக மேயராக பதவியை ஏற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம், கடலூர், ஓசூர், நாகர்கோவில், தஞ்சாவூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனால், இந்த 5 மாநகராட்சிகளில் மட்டும் தேர்தல் நடந்தது. அதில், காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது.  திமுக இரண்டு தரப்பாக பிரிந்து போட்டியிட்டதால் பதற்றம் நிலவியது. ஆனாலும், காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்பாளர் திமுக தலைமை சார்பில் நிறுத்தப்பட்ட மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த டாக்டர் சூர்யா ஷோபன் குமார் தோல்வியடைந்தார். ஷோபன் குமாரை விட 9 ஓட்டுகள் அதிகம் பெற்றி மகாலட்சுமி வெற்றி பெற்றார்.நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளராக மகேஷ் 4 ஓட்டுகள் கூடுதலாக பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த மீனாதேவ்வை தோற்கடித்தார். கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 27 மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களாக விடுதலை சிறுத்தை 3, காங்கிரஸ் 1 மற்றும் அதிமுக 6 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக சுந்தரி ராஜாவை எதிர்த்து திமுக வேட்பாளர் கீதா குணசேகரன் மனு தாக்கல் செய்தார். இறுதியில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றார். திமுக வேட்பாளருக்கு 20 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்டவருக்கு 12 ஓட்டுக்களும் கிடைத்தன. 13 பேர் வாக்களிக்க வரவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண். ராமநாதன் (திமுக) வெற்றி பெற்றார். அவர் 39 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 11 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். மொத்தம் 51 உறுப்பினர்கள். ஒருவர் வாக்களிக்கவில்லை. அதேபோல ஓசூர் மாநகராட்சியில் நடந்த மறைமுக வாக்கெடுப்பில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். மொத்தம் 5 மாநகராட்சிகளில் தேர்தல் நடந்தது. அனைத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி ெபற்றவர்கள் மேயர் பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு 21 மாநகராட்சி துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதிலும் 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். அதன்படி, சென்னை மாநகராட்சி துணை மேயராக மு.மகேஷ் குமார் (திமுக), திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி (திமுக), மதுரை மாநகராட்சி துணை மேயராக நாகராஜன் (மா.கம்யூ.), திருநெல்வேலி துணை மேயர் கே.ஆர்.ராஜூ (திமுக), கோவை மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் (திமுக), திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பாலசுப்பிரமணியம் (இந்திய கம்யூ.), ஈரோடு மாநகராட்சி துணை மேயர்-செல்வராஜ் (திமுக), தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் (திமுக), தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் ஜி.காமராஜ் (திமுக), ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார் (மதிமுக), காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் (காங்கிரஸ்), வேலூர் மாநகராட்சி மேயர் துணை மேயர் சுனில் (திமுக), தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்-அஞ்சுகம் பூபதி (திமுக), கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி பி.சரவணன் (திமுக), கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் (விசிக), ஒசூர் மாநகராட்சி துணை மேயர் சி.ஆனந்தையா (திமுக), திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா (திமுக), சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா (திமுக), நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.அதேநேரம், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற மறைமுக தேர்தலில் சில இடங்களில் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அந்த இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர்….

The post சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு: துணை மேயர் பதவிகளையும் திமுக கூட்டணி பிடித்தது appeared first on Dinakaran.

Tags : czagam ,chennai ,tambaram ,awadi ,kanchi ,avadi ,Disagha ,Urban Local Elections ,Tamil Nadu, Chennai ,Thambaram ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம்...