சாயல்குடி: குளிர் மற்றும் மலை பிரதேசங்களில் விளையக் கூடிய நீர் ஆப்பிள் சீசன் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. புதுவிதமாகவும், புது சுவையாகவும் இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகள், குளிர் பிரதேசங்களில் மட்டுமே கிடைத்து வந்த நீர் ஆப்பிள் தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, ஏர்காடு, குற்றாலம் போன்ற மலை காடுகளில் விளைவிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் விளைவிக்கப்படுகிறது. மருத்துவம் குணம் கொண்ட இந்த பழம் பனி காலம் உள்ள தை, மாசி மாதங்களில் மட்டுமே சீசனாக உள்ளது. நீர்சத்து மிகுந்து காணப்படுவதால் கோடையின் தாகத்தை தீர்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த பழம் விற்பனை தற்போது ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் போன்ற ஊர்களில் பழக்கடைகளிலும், சாலையோரங்களிலும் புதுவிதமாக தெரிவதால் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து சாயல்குடி வியாபாரி ஒருவர் கூறுகையில், நீர் ஆப்பிள் தண்ணீர்சத்து மிகுந்த பழம் என்பதால் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. சர்க்கரை, புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய் பிரச்னைகளை சரி செய்யக் கூடிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், கல்லீரல் மாரடைப்பு, வாதம், கண்நோய் போன்றவற்றிற்கும் சிறந்ததாக கூறப்படுகிறது. வைட்டமின் சி, மற்றும் ஏ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனை பெண்கள் அதிகமாக சாப்பிடலாம், தண்ணீர் ஆப்பிள் பார்பதற்கு ரோஸ் கலரில் சிறிய ரக முந்திரி பழம் வடிவில் காணப்படும், ஒரு பழம் சுமார் 40 கிராம் எடையளவு கொண்டது. இதன் மீது தண்ணீர் தெளித்தால் உடனடியாக உள்வாங்கி பிரஷாக தெரியும், தமிழ்நாட்டிலுள்ள ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, குற்றாலம் போன்ற மலை பகுதிகளிலிருந்து மதுரை மார்க்கெட்டிற்கு வந்து அங்கிருந்து வாங்கி வியாபாரம் செய்கிறோம். ஒரு கிலோ ரூ.200 முதல் 240வரை விற்கப்படுகிறது. பளிச்சிடும் கலரில், புதுவித பழமாக தெரிவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சிறிது புளிப்பு தன்மை இருப்பதால் உப்பு, மிளகாய் பொடி கலந்த பொடியை தொட்டு சாப்பிட கொடுக்கப்படுகிறது என்றார். …
The post வெப்பத்தை தணிக்கும் நீர் ஆப்பிள் விற்பனை படுஜோர்: கிலோ ரூ.240க்கு கிடைக்கிறது appeared first on Dinakaran.
