×

ஊட்டியில் கம்பிவட போக்குவரத்து அமைப்பு விரிவான சாத்தியக்கூறு பணிக்கு ரூ.96.63 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ஊட்டியில் உயரமான இடங்களில் கம்பிவடம் மூலம் இயங்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், உயரமான மலைப்பகுதிகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட சுற்றுலா மையங்களாக விளங்கும் இடங்களில் இயற்கைச் சூழல் பாதிக்கப்படாமல் நிலையான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதோடு, பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதியான பயணத்தை வழங்குவதாகும்.

இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பயணம் உறுதி செய்யப்படுவதோடு, அப்பகுதிகளின் வளர்ச்சியும், சுற்றுலாவும் மேம்படும். சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடிஇசி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவுட்டோர் இன்ஜினியர்ஸ் ஏஜி ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.96,63,011 (ஜிஎஸ்டி தவிர) மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சித்திக், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வேதா சுமன் முன்னிலையில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன், ஐடிஇசி நிறுவனத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் அவுட்டோர் இன்ஜினியர்ஸ் ஏஜி நிறுவனத்தின் பிரதிநிதி நவதீப் பதானியா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிறுவனம், உதகமண்டலத்தில் கம்பிவடம் மூலம் இயங்கும் போக்குவரத்துக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், வழித்தடத் தேர்வுகள், பயணிகளின் எண்ணிக்கைக்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றோடு நகரப் போக்குவரத்து மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தையும் விரிவாக மதிப்பிடும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தகவல் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் அடிப்படையாக அமையும். இந்த ஆய்வின் கால அளவு 120 நாட்கள் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ooty ,Metro Rail Corporation ,Chennai ,Chennai Metro Rail Corporation ,Chennai Metro Asset Management Company ,Tamil Nadu Industrial Development Corporation ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த...