×

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரி விழா, கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, இராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொற்காலம் என போற்றும் வகையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருக்கோயில் நிலங்கள் மீட்பு, திருக்கோயில் திருப்பணிகள் திருக்குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரி அன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.மகா சிவராத்திரி அன்று ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபடவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மஹா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றதோ அதை விட செம்மையாகவும், மகா சிவராத்திரி ஏன் நடத்தப்படுகின்றது என பக்தர்களுக்கு தெரிந்துக் கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரி அன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில் திருத்தேர் மற்றும் திருக்குங்களை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருக்குளங்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய திருக்குளங்களும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் சீர்கெட்டு இருந்த நிலையில் அதை தூக்கி நிறுத்துவதற்கு சில காலம் தேவைப்படும். ஆக்கிரமிப்புளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்களை அரசுத்துறை மற்றும் அறம் சார்ந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இதுவரை ரூ. 2042/- கோடி மதிப்பிலான கட்டடங்கள், நிலங்கள், குளங்கள்  ஆகியவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இடங்களில் HRCE என்ற  அடையாள கற்கள் பதிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. எட்டுக் கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகின்றது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கவனத்திற்கு வருவதையும், வராததையும் கவனித்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிதம்பரம் திருக்கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டு வருகின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்ப தகாத சம்பங்கள் இந்து சமய அறநிலைய துறைக்கு கவனத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முதல்வரின் உத்தரவின் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை த.வேலு, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் திருமதி த.காவேரி, சென்னை மண்டல இணை ஆணையர் திரு. ரேணுகாதேவி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். …

The post இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரி விழா, கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Institute ,Maha Shivaratri Festival ,Minister Segarbabu ,Chennai ,Maha Shivratri Festival ,Minister ,Segarbabu ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்