×

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை பறக்கும் படை பறிமுதல் செய்த பணம், புகார் குறித்து விசாரணை

சென்னை, மார்ச் 20: சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பறக்கும்படை பறிமுதல் செய்த பணம் மற்றும் புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் விக்டோரியா பொது அரங்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக உள்ள வாக்காளர்கள், சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் வாக்குப்பதிவு விவரம், வாக்குப்பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், தலைமையிட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 16 சட்டமன்றத் தொகுதி வாரியான தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படை குழுக்கள், கணக்கு குழுக்கள், உதவி செலவினப் பார்வையாளர்கள், பிரிவு அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் அகற்றப்பட்ட சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள், கொடிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படையின் களஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரம், ‘‘விஜில்’’ செயலியில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மற்றும் நடவடிக்கைகள், SUVIDHA செயலியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் மையங்கள், தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களின் தயார்நிலை மற்றும் தேவைப்படும் இயந்திரங்கள், தேர்தல் பொருட்கள் வழங்கும் மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள், பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் சொலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் பார்வையாளர் சங்கர் ஜெயிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Chennai, ,Flying Squad ,District Election Officer ,Kumaragurubaran ,Tamil Nadu Assembly General Election… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்