×

அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த சென்னை மாநகராட்சியில் 136 இடங்கள் தேர்வு: ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னை: அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடத்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் வாகன பேரணிக்கு கொரோனா தொற்று காரணமாக நாளை (11ம் தேதி) வரை அனுமதி இல்லை.அதன்படி, கூட்டம் நடைபெறும் இடம்  உள்ளரங்கமாக இருப்பின் 50 சதவிகித  திறன் அடிப்படையிலும் மற்றும் திறந்தவெளி அரங்கமாக இருப்பின் 30 சதவிகிதக்கு திறன் அடிப்படையிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி இடங்களில் கூட்டம் நடத்திட ஏதுவாக 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இதுகுறித்த விவரங்கள் மாநகராட்சியின் என்ற இணையதள இணைப்பில் மண்டல வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார அனுமதி தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  விண்ணப்பிக்க வேண்டும். கூட்டம் நடத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.   ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டம் நடத்த விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்த நபருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு காவல் துறையிடமிருந்து  தடையின்மை சான்று பெற  உதவியாக காவல் உதவி ஆய்வாளர் பணியமர்த்துப்பட்டுள்ளார்.  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர்கள் அதிகபட்சம் 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம். வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு அச்சிடப்பட்ட அறிவிப்புகளைப் பயன்படுத்தலாம்.  சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் பிரச்சாரத்திற்கு  அனுமதிக்கப்படமாட்டாது.  மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும்  சாதி அடிப்படையான  உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது.  மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு  தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் கூடாது.  பிறவேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் அல்லது நடத்தை குறித்து அவரது வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் நோக்கில் விமர்சிக்கக் கூடாது.  பிறவேட்பாளர்களின்  கூட்டங்கள், பிரச்சாரங்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் முகக்கவசம் தவறாமல் அணிய வேண்டும்.   வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு அச்சிடப்பட்ட அறிவிப்புகளை விநியோகிக்கும் போது முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிவது கட்டாயமாகும்.  முகக்கவசம் பயன்படுத்தப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்பதால், முகக்கவசம் பயன்படுத்துவது கட்டாயமாகும். எங்கு பிரச்சாரம் செய்தாலும் கொரோனா பெருந்தொற்று நெறிமுறைகளை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்துவதும் வேட்பாளர்களின் கடமையாகும்.  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை மீறும் நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த சென்னை மாநகராட்சியில் 136 இடங்கள் தேர்வு: ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Kagan Deep Singh Bedi ,Chennai ,Tamil Nadu State Election Commission ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து சிக்னல்களில்...