×

பிரதமரை சந்திக்க வைக்கும் விவகாரத்தில் பொய் சொல்வது யார்? ஆதாரத்தை வெளியிட்ட ஓபிஎஸ்; பம்மும் நயினார்: பேட்டி கொடுக்க விடாமல் கெஞ்சி கூத்தாடி அழைத்து சென்ற அண்ணாமலை

சென்னை: பிரதமரை சந்திக்க வைக்கும் விவகாரத்தில் நயினாருக்கு அனுப்பிய மெசேஜ் ஆதாரத்தை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நயினாரிடம் நிருபர்கள் கேட்டபோது பம்மியபடி பதிலளித்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதால் பேட்டி கொடுக்க விடாமல் கெஞ்சி கூத்தாடி அவரை அண்ணாமலை அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி அண்மையில் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். தமிழகம் வந்த அவரை சந்திக்க வாய்ப்பு கேட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ‘இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்’ என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எடப்பாடி உள்ளிட்ட தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதேபோல் பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்த போதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம், அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை. இனிமேலாவது உண்மையை பேசுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் நேற்று ஆரத்தி எடுத்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓபிஎஸ் எனக்கு 6 முறை போன் செய்தும், கடிதம் மூலம் தொடர்பு கொண்டும், நான் பதிலளிக்காததால் பிரதமரை சந்திக்க முடியாமல் போனதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனது உதவியாளரையும் அழைக்கவில்லை. அவர் ஆதாரம் இருக்கு என சொல்லலாமே தவிர, ஆதாரம் அவரது கையில் இருக்காது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள், நான் தான் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இதுக்கு முன் சட்டமன்றம் நடக்கும்போது பல முறை என்னை நேரிலும், உதவியாளர்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், தற்போது ஓபிஎஸ் என்னையோ, எனது உதவியாளரையோ அழைத்ததாக யாரும், எனக்கு தகவல் தரவில்லை. அவர் கடிதம் அனுப்பி இருப்பதாகக் கூறுவது எனக்கு தெரியாது. அந்த கடிதம் இன்னும் என்னை வந்து சேரவில்லை. இதை அவர் ஒரு குறையாக சொல்லியிருக்கிறார். நான் அவரைப்பற்றி குறை சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சூழலில், ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பகல் ஒரு மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தார். அவரிடம் நிருபர்கள், ‘‘நயினார் நாகேந்திரனிடம் கேட்டிருந்தால், பிரதமரை கண்டிப்பாக சந்திக்க வைப்பதாக தெரிவித்துள்ளாரே?’’ என்று கேட்டதற்கு, ‘‘பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் அனுமதி கேட்டு கடிதம் வெளியிட்டோம். அவருக்கு எஸ்எம்எஸ்சும் அனுப்பினேன்’’ என்றபடி, தனது மொபைல் போனை எடுத்து ஆதாரமாக அதிலிருந்த நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய எஸ்எம்எஸ்சை காட்டினார். ‘‘பிரதமர் வரும் முன்பே 24ம் தேதி காலையில் எஸ்எம்எஸ் அனுப்பினேன்’’ என்றபடி காட்டிய அந்த எஸ்எம்எஸ்சில், ‘‘ஹானரபிள் ஏஐஏடிஎம்கே கோஆர்டினேட்டர் மிஸ்டர் ஓ.பன்னீர்செல்வம் வான்ட்ஸ் டூ ஸ்பீக் வித் யூ’’ என இருந்தது. இதற்கும், முன்னதாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி, இதே எஸ்எம்எஸ்சை அவருக்கு அனுப்பியதாக ஓபிஎஸ்சின் செல்போனில் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பது தொடர்பாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது குறித்து உங்கள் பதில் என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு, நயினார் நாகேந்திரன் பதிலளிக்க முற்பட்டபோது, அருகில் நின்ற அண்ணாமலை இடைமறித்து இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாநில தலைவர் திருநெல்வேலி செல்ல வேண்டி உள்ளது.

நாங்கள் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றார். ஆனாலும் நயினாரிடம் நிருபர்கள் ஓபிஎஸ் குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்டனர். நயினார் நாகேந்திரன் பதிலளிக்க முயன்றார். ஆனால் மீண்டும் இடைமறித்த அண்ணாமலை நிருபர்களிடம், அண்ணே அதை பேசிக்கலாம்ணே….. அண்ணே ஒரு நிமிஷம்ணே…….அண்ணே… அண்ணே…..தலைவா பேசிக்கலாம் பெரிது படுத்தாதீங்க. பவானியில் ஏற்கனவே பேசிட்டாங்க என கூறி கடைசி வரை நயினாரை பதிலளிக்க விடாமல் கெஞ்சிக்கூத்தாடி அங்கிருந்து அழைத்து சென்றார்.

 

The post பிரதமரை சந்திக்க வைக்கும் விவகாரத்தில் பொய் சொல்வது யார்? ஆதாரத்தை வெளியிட்ட ஓபிஎஸ்; பம்மும் நயினார்: பேட்டி கொடுக்க விடாமல் கெஞ்சி கூத்தாடி அழைத்து சென்ற அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : OPS ,Nainar ,Annamalai ,Chennai ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...