×

71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; ‘பார்க்கிங்’ தமிழ் படம் 3 விருதுகளை வென்றது: சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

சென்னை: 2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகராக ‘பார்க்கிங்’ படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கும், இதே படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கு இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றுள்ளார்.

மேலும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ் ஆவண படத்திற்காக சரவணமருது சவுந்தரபாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்க்கிங் படத்திற்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இதற்கு முன் சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கியிருந்தார். இப்போது இரண்டாவது முறையாக அவர் விருது பெறுகிறார். சிறந்த மலையாள படமாக ஊர்வசி, பார்வதி ஆகியோர் நடித்த ‘உள்ளொழுக்கு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த கன்னட படமாக ‘கண்டீலு’, சிறந்த தெலுங்கு படமாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஃகதல்’ படம் சிறந்த இந்தி படமாக தேர்வாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சிறந்த படமாக விக்ராந்த் மாஸ்ஸே நடித்த ‘12த் ஃபெயில்’ (இந்தி) படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக ‘12த் ஃபெயில்’ படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸேக்கும் ‘ஜவான்’ படத்திற்காக ஷாருக்கானுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி ‘மிஸ்டர் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே’ படத்திற்காக வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசி ‘உள்ளொழுக்கு’ படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த சண்டை இயக்குனர் மற்றும் சிறந்த அனிமேஷன் என இரண்டு விருதை ‘ஹனுமன்’ (தெலுங்கு) படத்திற்காக நந்து மற்றும் பிருத்வி விருது வென்றுள்ளனர். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ (இந்தி) தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனர் பிரிவில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்காக சுதிப்தோ சென் இடம்பிடித்துள்ளார்.

சிறந்த திரைக்கதை ‘பேபி’ (தெலுங்கு), ‘பார்க்கிங்’, (தமிழ்), ‘சிரஃப் ஏக் பந்தா’ (இந்தி) ஆகிய படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டிங் ‘பூக்காலம்’ (மலையாளம்) படத்திற்காக மிதுன் முரளி வென்றுள்ளார். சிறந்த நடன இயக்குனருக்கான விருது ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ (இந்தி) படத்திற்காக வைபவி மெர்ச்சண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற விருதுகள் விவரம்: சிறந்த மேக்கப் : ஸ்ரீகாந்த் தேசாய் (சாம் பகதூர், இந்தி). சிறந்த ஆடை வடிவமைப்பு : சச்சின் லாவ்லேகர், திவ்யா காம்பிர் மற்றும் நித்தி காம்பிர் (சாம் பகதூர், இந்தி). சிறந்த சவுண்ட் டிசைன் : சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் முரளிதரன் (அனிமல், இந்தி). சிறந்த வசனம் : தீபக் கிங்ராணி (சிர்ப் ஏக் பன்தா காஃபி ஹே, இந்தி). சிறந்த பின்னணி பாடகி : ஷில்பா ராவ் (சல்லயா… (ஜவான், இந்தி).

சிறந்த பின்னணி பாடகர் : பிவிஎன் எஸ் ரோகித் (பேபி… தெலுங்கு). சிறந்த குழந்தை நட்சத்திரம் : சுக்ருதி வெனி, கபீர் கந்தாரே, ட்ரிஷா தோசர், ஸ்ரீனிவாஸ் போகாலே மற்றும் பார்கவ். சிறந்த படம் (அனிமேஷன், விஷூவல் எபக்ட்ஸ்) : ஹனுமன், தெலுங்கு. சிறந்த குழந்தைகள் படம் : நால் 2 (மாரத்தி). சிறந்த அறிமுக இயக்குனர் படம் : ஆஷிஷ் பென்ட்டே (படம்: ஆத்மாபாபலேட் – மராத்தி).

The post 71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; ‘பார்க்கிங்’ தமிழ் படம் 3 விருதுகளை வென்றது: சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் appeared first on Dinakaran.

Tags : 71st National Film Awards ,G.V. Prakash ,Chennai ,M.S. Bhaskar ,Ramkumar Balakrishnan ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...