×

முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுப்பணி துறையின் மூலம் கட்டப்பட்ட எழில்மிகு கட்டடக்கலையின் சாதனை

** ரூ.4,179 கோடியில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்
* ரூ.240.53 கோடியில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை

சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும்-வரலாற்று சிறப்புமிக்க கலை சின்னங்களை உருவாக்கும் பெருமைக்குரிய துறையாகும். தமிழ்நாடு அரசின் இன்றைய தலைமை செயலகக் கட்டடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடம். பல்கி பெருகியுள்ள அரசின் நிர்வாக துறைகள் அனைத்திற்கும் இடம் தேவைப்பட்டதால் 1974ல் கலைஞர் நாமக்கல் கவிஞர் மாளிகை என்னும் பிரம்மாண்டமான 10 மாடி கட்டடத்தை கட்டினார்கள். அந்த கட்டடமும் இடப்பற்றாக்குறையை நிரப்ப முடியாது என்ற நிலையில், தேவையின் அடிப்படையில் கலைஞர், புதிய தலைமைச் செயலகம்- சட்டமன்ற கட்டடத்தை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கட்டி முடித்தார் அது ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தை ரூ. 80 கோடியில் புதுப்பித்து கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்.

2021ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு காலத்தில் சென்னை கிண்டியில் ரூ.240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை 6 தளங்களுடன் கட்டி 2023ம் ஆண்டு திறந்து வைத்தார். இன்று அந்த மருத்துவமனையில் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு உயர்தரமான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். கொளத்தூர் தொகுதியில் 210 கோடியே 80 லட்சம் ருபாய் செலவில் 6 அடுக்குத் தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்கம்- நவீன ரத்த வங்கி, புற்று நோயியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, நரம்பியல் பிரிவு, மகப்பேறு பிரிவு என்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து வசதிகளோடும் மிகப் பிரம்மாண்டமாக உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 187.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், ஆகிய 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டடங்கள் ரூ. 4179 கோடியில் கட்டப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் ரூ. 218 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.109.71 கோடியில் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம், ரூ.118.40 கோடியில் கட்டப்பட்ட ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம், ரூ. 114.48 கோடியில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம், ரூ. 70.57 கோடியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தா கலைஞர் நூற்றாண்டு நினைவாக ரூ. 218.84 கோடி செலவில் மதுரையில் 6 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான நூலகம் உலகத்தரத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ. 62.77 கோடி செலவில் 5 தளங்களுடன் அனைத்து வசதிகளும் கொண்ட உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவாக திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ. 37 கோடி செலவில் மிக பிரமாண்டமான கண்ணாடி இழை பாலத்தினை கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இவை மட்டுமல்லாமல் புதுடெல்லி சாணக்கியபுரியில் ரூ.257 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள வைகை தமிழ்நாடு இல்ல கட்டடங்கள். கோவை மாநகரில் கட்டப்படும் ரூ.300 கோடி மதிப்பிலான தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம். திருச்சி மாநகரில் கட்டப்படும் ரூ.290 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம், முதலிய பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் பல்வேறு உயர் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமைகள் சேர்க்கும் பல சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி, திராவிட மாடல் அரசின் பொற்கால ஆட்சியை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார்கள். புத்தம் புதிய உயர் தொழில்நுட்பங்களுடன் கட்டப்படும் கலை செல்வங்களாம் இந்த முத்திரை திட்டங்கள் எல்லாம் எதிர்கால வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என போற்றி புகழப்படும் பெருமைக்குரிய கட்டடங்களாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுப்பணி துறையின் மூலம் கட்டப்பட்ட எழில்மிகு கட்டடக்கலையின் சாதனை appeared first on Dinakaran.

Tags : Public Works Department ,Chief Minister ,M.K. Stalin ,Guindy Kalaignar Centenary High Specialty Hospital ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் தீவிரமடையும் கடுங்குளிர்...