×

பருவகால மாற்றத்தால் கடலில் மாறுபட்ட நீரோட்டம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்கும் மீனவர்கள்

 

மரக்காணம், ஜூலை 23: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன் குப்பம், வசவன் குப்பம், கைப்பாணி குப்பம், எக்கியர் குப்பம், மண்டவாய் புதுகுப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிவேக விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் போன்றவைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள மீனவ கிராமங்களில் தினந்தோறும் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட கடல் சார்ந்த உணவு பொருட்களை வலைகள் மூலம் பிடித்து வருவார்கள்.

இதுபோல் பிடித்து வரப்படும் கடல் உணவு பொருட்கள் வெளிநாடுகளில் கூட ஏற்றுமதி செய்கின்றனர். ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவ கால மாற்றத்தின் காரணமாக கடலில் மாறுபட்ட நீரோட்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்த மாறுபட்ட நீரோட்டத்தின் காரணமாக கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளில் மீன்கள் சிக்காமல் வெறும் வலைகளுடன் கரை திரும்புவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதனால் மீன்பிடி பைபிள் போர்ட் இன்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் மனித உழைப்பும் வீணாவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். ஆனால் ஒரு சிலர் தங்களது தொழிலை விட முடியாமல் மரக்காணம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் சிறிய வகை படகுகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

இதில் குறைந்தளவில் கிடைக்கும் மீன்கள், இறால், நண்டு போன்றவைகளை விற்பனை செய்து தங்களது குடும்பத்தை பாதுகாப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதுபோல் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் அதிகளவில் மீன்கள் சிக்காததால் சிறிய வகை மீன்களின் விலை கூட மார்க்கெட்டில் அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

The post பருவகால மாற்றத்தால் கடலில் மாறுபட்ட நீரோட்டம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்கும் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Marakkanam ,Viluppuram District ,Alaghan Kupam ,Vasawan Kupam ,Kippani Kupam ,Ekiyr Kupam ,Mandawai Pudugupam ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா