×

சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னை ஓபன்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கம்(டிஎன்டிஏ) சார்பில் அக்.27 முதல் நவ.2ம் தேதி சர்வதேச டபிள்யூடிஏ பெண்கள் ெடன்னிஸ் போட்டியான ‘சென்னை ஓபன்’ போட்டி மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. முதல் டபிள்யூடிஏ ெசன்னை ஓபன் 2023ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இப்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான 2வது சென்னை ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் சர்வதேச வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.

ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 இணைகளும் களம் காணுவர். மொத்த பரிசுத் தொகை 2.40 கோடி ரூபாயாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு சுமார் 32லட்ச ரூபாயும், இரட்டையர் பிரிவில் வெற்றிப் பெறும் இணைக்கு சுமார் 11.5ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதுதவிர ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிப் பெறும் வீராங்கனைளுக்கும் ரொக்கப்பரிசு உண்டு.

சென்னை ஓபன் நடைபெறுவது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முறைப்படி அறிவித்தார். அப்போது அவர், ‘ பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் அக்.27 முதல் நவ.2ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் நடைபெறும். முக்கிய போட்டிகள் டென்னிஸ் உச்ச நட்சத்திரமான விஜய் அமிர்தராஜ் பெயர் சூட்டப்பட்ட மைய அரங்கில் நடக்கும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு இடையே சென்னை ஓபன் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தப் போட்டிக்காக தமிழ்நாடு முதல்வர் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

சர்வதேச போட்டிகள் இங்கு தொடர்ந்து நடைபெறுவதின் மூலம் நம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, சர்வதேச களத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது’ என்றார். இந்த நிகழ்ச்சியில் டிஎன்டிஏ தலைவர் விஜய் அமிர்தராஜ், விளையாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத், டிஎன்டிஏ கவுரவ செயலர் வெங்கடசுப்ரமணியம், அமைப்புச் செயலாளர் ஹிதேன் ேஜாஷி, கவுரவ பொருளாளர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் கோப்பை: தொடங்கியது முன்பதிவு
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். இந்த 2025ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்தப் போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படும். முதலில் மாவட்ட வாரியாகவும், பின்னர் மண்டல வாரியாகவும் போட்டி நடைபெறும். அவற்றில் சிறப்பிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதிப் பெறுவார்கள்.

மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் ஆக.22 முதல் செப்.12ம் தேதி வரை நடைபெறும். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 25, மண்டல அளவில் 7, மாநில அளவில் 37வகையான தனிநபர், குழு விளையாட்டுப் போட்டிகள் 83.37கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் www.cmtrophy.sdat.in அல்லது www.sdat.gov.in என்ற இணைய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இப்படி ஆக.16ம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

The post சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னை ஓபன்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Open ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Tamil Nadu Tennis Association ,TNDA ,WTA women's tennis tournament ,WTA Chennai Open ,International women's ,tournament ,Dinakaran ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...