×

தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

25 மற்றும் 26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். இன்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Scientist ,Chanthamarai Kannan ,Puduwa ,Karaikal ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!