சென்னை: படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங்களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி நிறுவப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் 15 மாவட்டங்களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகம் என்ற கணக்கில் 15 இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு உள்ளன.
இதற்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்பாட திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக 10 பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு 90% செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நவீன உலகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை நோக்கி நகர்கிறது. இந்த வகுப்புகள் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவெடுக்க தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
பள்ளிகள் அதனை சுற்றியுள்ள இதர பள்ளிகளுக்கு ஹப் பள்ளியாகச் செயல்பட்டு மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாகச் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, இந்த இயந்திரவியல் ஆய்வகங்கள் வெறும் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமல்ல. இது மாணவர்களின் சிந்தனை முறையையே மாற்றக்கூடிய ஒரு முழுமையான கல்வித் திட்டமாகும். இது அரசுப்பள்ளி மாணவர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ள தயார் செய்து, திறன்மிக்க படைப்பாளர்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
