விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்க இருந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு வெடி விபத்து நடந்து வந்த நிலையில், இனி ஒரு விபத்து கூட நடக்கக் கூடாது எனக் கூறி உடனடி ஆய்வுக்குப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் ஏற்பட்ட அச்சத்தில் ஆலைகளை உரிமையாளர்கள் மூடி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
பட்டாசு ஆலை நடத்துவதற்கு பொதுவாக 10-க்கு 10 அறையில் 4 வாசல்கள் அமைக்கப்பட்டு, ஓர் அறையில் 4 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால் விதிமுறைகள் மீறப்படுவதால், அடிக்கடி பட்டாசு ஆலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் தேவையான உரிமங்களை பெற்று இயங்குகிறதா, பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, தொடர்புடைய துறைகள் தொடர்ந்து ஆலைகளை ஆய்வு செய்கின்றனரா, இத்துறைகள் சார்பில் ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்கவும், ஆலையை மூடவும் உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தது. இதையடுத்து 10 நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய 15 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடக்க இருந்த ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என்பதால் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
The post பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அச்சத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடல் appeared first on Dinakaran.
