×

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்: 2,500 போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சஷ்டி விழா, வைகாசி விசாக விழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயிலில் கடந்த 2011, ஜூன் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாளை (ஜூலை 14) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்க உள்ளது.

இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுர விமானம், உபகோயில்கான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர் கோயில், காசிவிசுவநாதர் கோயில், குருநாதர் சுவாமி கோயில், பாம்பாலம்மன் கோயில் ஆகிய இடங்களில் பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து இக்கோயில்களில் ஏப்.16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.  கடந்த மார்ச் 5ம் தேதி முதல் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கின. தொடர்ந்து கோயிலில் முழு வீச்சில் திருப்பணிகள் நடந்து நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து கும்பாபிஷேக பணிகளுக்கான யாகசாலை, கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா மண்டபம் அருகே அமைக்கப்பட்டன. கடந்த 10ம் தேதி முதலாவது யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 2ம் மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடந்தது. இன்று 6 மற்றும் 7ம் கால யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன.

நாளை (ஜூலை 14) அதிகாலை 3.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, அதிகாலை காலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருச்செந்தூரை தொடர்ந்து இங்கும் தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அறநிலையத்துறை நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 2,500க்கும் அதிகமான போலீசார் ஈடுபட உள்ளனர்.

* 200 சிவாச்சாரியார்கள் 75 யாக குண்டங்கள்
கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த யாகசாலை பூஜைகளில் ஸ்தானிக பட்டர்கள் தலைமையில் சுமார் 200 சிவாச்சாரியார்கள் பங்கேற்று நடத்தி வருகின்றனர். மேலும், 70 ஓதுவார்கள், 30 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் 20 பேர் குருவேத பாராயணத்தில் ஈடுபட்டனர்.

சுப்ரமணிய சுவாமிக்கு 25 குண்டங்கள், சத்யகிரீஸ்வரருக்கு 9, கோவர்த்தன அம்பிகைக்கு 9, கற்பக விநாயகருக்கு 5, துர்க்கை அம்மனுக்கு 5, ராஜகோபுரத்திற்கு 5, பரிவார தெய்வங்களுக்கு 17 குண்டங்கள் சேர்த்து மொத்தம் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமிகளுக்கு தங்க மற்றும் வெள்ளிக்குடங்கள் 150, பித்தளை, செம்பு குடங்கள் 100 மொத்தம் 250க்கும் மேற்பட்ட குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகத்தின்போது 96 வகையான மூலிகை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

The post முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்: 2,500 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Maha Kumbabhishekam ,Thiruparankundram Temple ,Lord Murugan ,Thiruparankundram ,Subramanya Swamy Temple ,Madurai ,Sashti festival ,Vaikasi Visakha festival.… ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...