×

வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்: மத்திய கிழக்கில் பதற்றம்


தெஹ்ரான்: ஈரான் தனது, வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சில நாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உதவியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு உதவும் நாடுகளும் இந்த போரில் எங்களுக்கு எதிரிதான் என்று ஈரான் ஏற்கனவே கூறியிருக்கிறது. அந்த வகையில் உக்ரைன் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது. இந்த உதவி தொடரக்கூடாது. ஒருவேளை தொடர்ந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மறுபுறம் அமெரிக்கா மீண்டும் எங்கள் மீது தாக்குதலை தொடங்கினால், ‘ஹார்முஸ் நீரிணை’ முழுவதும் கண்ணி வெடிகளை மிதக்க விடுவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா இந்த போரில் தீவிரமாக நுழைந்தால், நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஏற்கனவே இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தும்போது ஈரான் தனது வான் எல்லையை மூடியிருந்தது. இதனை தொடர்ந்து, நேற்றிரவு மீண்டும் தனது வான் எல்லையை மூடியிருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஈரானின் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அகவன் கூறுகையில், “சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவின் அடிப்படையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதியின் வான் பரப்பை மூடியிருக்கிறோம். இந்த பகுதியில் சர்வதேச விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கிழக்கு பகுதியை பயணிகள் விமானங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி என 3 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை இன்று, மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார். இஸ்ரேலுடனான தாக்குதல் கடந்த 25ம் தேதி முடிவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு பிறகு ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான்வெளியை பயணிகள் விமானத்திற்கு திறந்து விட்டிருந்தது. ஹஜ் புனித யாத்திரை முடிந்து சவுதி அரேபியாவிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான ஈரான் யாத்ரீகர்களுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென மீண்டும் வான் பரப்பை ஈரான் மூடியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

The post வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்: மத்திய கிழக்கில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Iran ,Middle East ,Tehran ,Israel ,United States ,Dinakaran ,
× RELATED 2025 கடினமாக அமைந்தது; 2026 இதைவிட மோசமாக இருக்கும்: இத்தாலி பிரதமர் பேச்சு