ரோம்: இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது அலுவலக ஊழியர்களிடம், 2026ம் ஆண்டு நடப்பாண்டை விட இன்னும் கடினமாக இருக்கும் என்று எச்சரித்தார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் பேசியதாவது: 2025ம் ஆண்டு நம் அனைவருக்கும் கடினமாக இருந்தது. ஆனால் கவலைப்பட வேண்டாம். அடுத்தாண்டு இன்னும் மோசமாக இருக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்குமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஏனென்றால் இந்த அசாதாரண நாட்டின் சவால்களுக்கு நாம் தொடர்ந்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டின் இறுதி அமைச்சரவை கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் தயாராகி வரும் வேளையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுத விற்பனைக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆணையை அமைச்சரவை கூட்டம் விவாதிக்க உள்ளது. இத்தாலிய பிரதமரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்வினையாற்றி உள்ளனர்.
