புனோம் பென்: தாய்லாந்து, கம்போடியா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போர் வெடிக்கும் சூழலும் கூட ஏற்பட்டது. 16 நாட்கள் நீடித்த இந்த கடுமையான மோதல்களில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து இடித்து விட்டதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது தொடர்பாகப் பிரியா விஹியர் செய்தி தொடர்பாளர் லிம் சான்பன்ஹா கூறுகையில், ‘கம்போடியாவின் செஸ் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இந்த சிலை 2014ல் கட்டப்பட்டது. தாய்லாந்து எல்லையில் இருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் உள்ள இந்த சிலை கடந்த 22ம் தேதி தகர்க்கப்பட்டது. பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்றார். தாய்லாந்து அரசே இந்த சிலையை இடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை தாய்லாந்து மவுனமாகவே இருக்கிறது. எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை.
‘பேக்ஹோ லோடர்’ மூலம் விஷ்ணு சிலை இடிப்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் இது ஏஐ வீடியோவாக இருக்கலாம் என முதலில் குறிப்பிட்டனர். இருப்பினும், இது ஏஐ வீடியோவாக இருக்க வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்து மற்றும் பௌத்தர்களால் வணங்கப்படும் இச்சிலை ஒரு வழிபாட்டு தலம் என கம்போடியா கூறியுள்ளது. இது ஒருபுறம் இருக்க தாய்லாந்து, கம்போடியா இடையே போர் நிறுத்தம் கொண்டு வர ராணுவ அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். இதை, தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் சூரசாந்த் கொங்சிரி உறுதிப்படுத்தினார். இந்த அமைதி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு நேற்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்து மற்றும் பௌத்த மக்கள் அந்த சிலையை வழிப்பட்டு வந்தனர். சிலையை இடித்ததை ஏற்க முடியாது” என்று அவர் தெரிவித்தார். மேலும் ராணுவ மோதல்கள் இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் இத்தகைய அவமரியாதையான செயல்கள் நடக்கவே கூடாது என்று இந்தியா வலியுறுத்தியது.
