நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த லாரி விபத்துகளில் அடுத்தடுத்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து மினி லாரிகளை இயக்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாகாணங்களுக்கு இடையேயான குடியேற்ற சோதனைச் சாவடிகளில் கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 12ம் தேதி வரையிலும் குடியேற்றத்துறை உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ பிரிவில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சியால், சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் எல் சல்வடார், சீனா, எரிடிரியா, ஹைதி, ஹண்டுரோஸ், மெக்சிகோ, ரஷ்யா, சோமாலியா, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து வணிக வாகன ஓட்டுநர் லைசென்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மினி லாரி ஓட்டி வந்த போது சோதனையில் சிக்கி உள்ளனர்.
