வாஷிங்டன்: அமெரிக்காவுடனான உறவு ஆழமடைவதை தடுக்க எல்லை பிரச்னையில் விட்டுக் கொடுத்து விட்டு மறுபுறம் பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் சீனாவிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்பில் சீனா தொடர்பான ராணுவ மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியா-சீனா விவகாரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நெருக்கம் ஏற்படுவதைத் தடுக்கவே சீனா இந்த எல்லைப் பதற்றத்தை தணிக்க முன்வந்தது. இதற்காக இந்தியாவுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி எல்லையில் மீதமுள்ள மோதல் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இது பல ஆண்டு எல்லை மோதல் பிரச்னைக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது.
இதில் சீனாவின் முக்கிய நோக்கமே இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மேலும் ஆழமடைவதை தடுக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனாலும், சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து இந்தியா சந்தேகத்துடன் இருக்கலாம். தொடர்ச்சியான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பிற எரிச்சலூட்டும் விஷயங்கள் இருதரப்பு உறவை கிட்டத்தட்ட நிச்சயமாகக் கட்டுப்படுத்துகின்றன. அருணாச்சல பிரதேசத்தை தைவான் மற்றும் தென் சீனக் கடல் போன்ற பேச்சுவார்த்தைக்கு உட்படாத பிரிவில் வைப்பதன் மூலம், சீனா இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடியாக சவால் விடுகிறது.
அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுடன் சீனா விட்டுக் கொடுத்தாலும் மறுபுறம் பாகிஸ்தானுக்கு அதிகப்படியான ராணுவ ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2020 முதல் பாகிஸ்தானுக்கு 36 ஜே-10சி போர் விமானங்களை சீனா வழங்கி உள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து ஜேஎப்-17 போர் விமானங்களை தொடர்ந்து தயாரித்து வருகின்றன. சீனாவின் ஆயுதமேந்திய டிரோன்களை பெறும் முக்கிய நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து இருந்து வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் தீவிரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சிகளை நடத்தி உள்ளன. இது அவர்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஆழத்தை காட்டுகிறது. எனவே இரட்டை வேடம் போடும் சீனா விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு, 100 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
