பெரும்புதூர்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள கிராமத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இளம்பெண் குடியிருந்து வந்த வீட்டின் அருகிலேயே விழுப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரும் குடியிருந்து வந்துள்ளார். இதனால், மணிகண்டனும், இளம்பெண்ணும் நட்பாக பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், இளம் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஒரகடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், இளம்பெண்ணை அழைத்துச் செல்வதாக கூறி, அடர்ந்த முட்புதருக்கு அழைத்துச் சென்று தனது ஆசைக்கு இணங்க இளம்பெண்ணை மணிகண்டன் மிரட்டியுள்ளார். இளம்பெண் இதற்கு மறுக்கவே, அவரை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பின்னர், அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விழுப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது விசாரித்ததில் இதனை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.
The post இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.
