×

கொடைக்கானல் பஸ் நிலையத்தில் புகுந்த காட்டுமாடு: சுற்றுலாப்பயணிகள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பஸ் நிலைய வளாகத்திற்குள் காட்டுமாடு புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகளின் தொந்தரவும், அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. மலை கிராம பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் மலை கிராமத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். கொடைக்கானல் நகர் பகுதியில் அவ்வப்போது காட்டு மாடுகள் கும்பல், கும்பலாக சுற்றி திரிகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று காட்டுமாடு திடீரென நுழைந்தது. பஸ் நிலையத்தில் காத்திருந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் காட்டுமாட்டை பார்த்து அச்சமடைந்தனர். சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காட்டு மாடு அங்கிருந்து வெளியேறி சென்றதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானல் நகரில் சுற்றித்திரியும் காட்டுமாடு கூட்டத்தை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானல் பஸ் நிலையத்தில் புகுந்த காட்டுமாடு: சுற்றுலாப்பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal bus station ,Kodaikanal ,Dindigul district ,Godaikanal ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...