×

ஆவடி படை உடை தொழிற்சாலைக்கு சுரினாம் பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டு

சென்னை: சென்னை ஆவடியில் இயங்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சக பொதுத்துறை நிறுவனமான படை உடை தொழிற்சாலைக்கு சுரினாம் பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஆவடியில் இயங்கும் படை உடை தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பழமையான பாதுகாப்பு அமைச்சக உற்பத்தி பிரிவாகும்.

இது இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை போன்றவற்றிற்கு சீருடைகளையும், சிறப்பு ஹெல்மெட்கள், குண்டு துளைக்காத உடைகள், வாகனங்களுக்கான குண்டு துளைக்காத கவசங்கள், தொழிற்சாலைகளுக்கான எளிதில் தீ பிடிக்காத வகை உடைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இத்துறையில் இந்தியாவில் மிகவும் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த நிறுவனமாகவும் விளங்குகிறது. மேலும் வாகனங்களை குண்டு துளைக்காத வாகனங்களாக மாற்றி வழங்கி வருகிறது.

அண்மையில் உருவாக்கப்பட்ட படைவீரர் வசதி நிறுவனம் என்ற அமைப்பின் கீழ் இது தற்போது கொண்டுவரப்பட்டு, செயல்பட்டு வருகிறது.ஒன்றிய அரசு பாதுகாப்பு ராஜதந்திர நிதியத்தின் கீழ், சுரினாம் நாட்டு ராணுவத்தினருக்கு 4500 செட் சீருடைகளை வழங்க முடிவு செய்தது. அதற்கான உற்பத்தி ஆணையை சென்னை ஆவடி படை உடை தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.

அதை தொடர்ந்து, நிறுவனம் குறித்த காலத்தில் உலக தரத்தில் டிஜிட்டல் டிசைனில் இவற்றை உருவாக்கி கடந்த ஜனவரி 28ம் தேதி துறைமுகம் வாயிலாக அனுப்பி வைத்தது. அதனை நிறுவனத்தின் பொது மேலாளர் பி எஸ் ரெட்டி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இவை சுரினாம் நாட்டை குறித்த நாட்களுக்குள் சென்றடைந்துள்ளது.

அவற்றை தரப் பரிசோதனை செய்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தனது முழு திருப்தியை வெளியிட்டுள்ளதோடு மிகச் சிறப்பான தரத்தில் அவற்றை திட்டமிட்டபடி அனுப்பி தந்தமைக்கு தமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக படை உடை தொழிற்சாலை பொது மேலாளர் பி.எஸ்.ரெட்டிக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மத்தியூரா, ஜூன் 9ம் தேதியிட்டு எழுதியுள்ளார்.

அதில் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இதுபோன்ற கூடுதல் நடவடிக்கைகளை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக பி.எஸ். ரெட்டி தனது நிறுவன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

The post ஆவடி படை உடை தொழிற்சாலைக்கு சுரினாம் பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Suriname Ministry of Defence ,Avadi Force Clothing Factory ,Chennai ,Ministry of Defence of Suriname ,Union Ministry of Defence Public Sector Company Force Clothing Factory ,Chennai Avadi ,Force Clothing Factory ,Ministry of Defence ,India ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...