×

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் ஜூன் 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பம், வானிலை காரணமாக 6 முறை அது ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அனைத்து தொழில்நுட்ப பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, நேற்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம், ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். முன்னதாக விண்வெளிப் பயணத்தின் துவக்கத்தின்போது “ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்..” என்று முழங்கி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர்.

ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களுக்கு பானம் கொடுத்து வரவேற்றனர். இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா, இன்று விண்வெளி வீரராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் ராகேஷ் சர்மாவை தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் ஆகிய சாதனைகளை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடல் தசையில் செயல்பாடு குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

The post சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா! appeared first on Dinakaran.

Tags : Subanshu Shukla ,International Space Station ,Space X ,Kennedy Space Center ,Florida, USA ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...