×

பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வீரர் சுபான்சு வெற்றி பயணம்: 41 ஆண்டுகளுக்கு பின் விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர்

புதுடெல்லி: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய வீரர் சுபான்சு சுக்லா வெற்றிகரமாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் சென்ற விண்கலம் 28 மணி நேரத்திற்குப் பிறகு இன்று சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும். அமெரிக்காவின் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஆதரவுடன் அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸியம் ஸ்பேஸ் தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல இந்தியாவின் சுபான்சு சுக்லா, நாசா முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவின் விண்வெளி பயணம் கடந்த மே மாதமே திட்டமிடப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக விண்வெளி பயணம் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு குழுவினர் நேற்று விண்வெளி பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டு அவை சரி செய்யப்பட்ட பின், இந்திய நேரப்படி நண்பகல் 12.01 மணிக்கு பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு, சுபான்சுவின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அவர் படித்த பள்ளி உட்பட உலகின் பல இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சுபான்சு குழுவினருடன் பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கி புறப்பட்டதை, லக்னோவில் இருந்து தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்த சுபான்சுவின் தந்தை சாம்பு சுக்லா மற்றும் தாய் ஆஷா சுக்லா மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வாழ்த்தினர். இந்த பயணத்தின் மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் 2வது இந்தியர் என்ற சாதனையை சுபான்சு படைத்துள்ளார். இதற்கு முன் 1984ம் ஆண்டு சோவியத் யூனியனின் சல்யூட்-7 விண்வெளி நிலையத்திற்கு 8 நாள் பயணமாக இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா சென்றுள்ளார்.

அதன் பிறகு விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர் சுபான்சு. இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனும், விஞ்ஞானியுமான சுபான்சு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இந்த விண்வெளி பயணம் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. விண்ணில் ஏவப்பட்ட 10 நிமிடத்தில் விண்கலம் பூமியை சுற்றி வரத் தொடங்கியது. இந்த விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து 28 மணி நேரத்திற்கு பிறகு இன்று மாலை 4.30 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்சு குழுவினர் 14 நாட்கள் தங்கியிருந்து 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி சுபான்சு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார். அவர் அங்கிருந்தபடி பிரதமர் மோடியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட சுபான்சுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இஸ்ரோ மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பின் கீழ், நாசாவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பரிசோதனைகளை சுபான்சு மேற்கொள்ள உள்ளார். ஆக்சியம்-4 திட்டத்திற்காக இஸ்ரோ ரூ.550 கோடியை செலவிடுவது குறிப்பிடத்தக்கது.

 

The post பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வீரர் சுபான்சு வெற்றி பயணம்: 41 ஆண்டுகளுக்கு பின் விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் appeared first on Dinakaran.

Tags : Subhanshu ,International Space Station ,New Delhi ,Subhanshu Shukla ,Kennedy Space Center ,Florida, USA ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...