×

ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு..!

வாஷிங்டன்: ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது.

இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து, ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.

அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.

The post ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Tags : Trump ,United States ,Iran ,Washington ,Israel ,Gaza ,Palestinians ,Dinakaran ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...