×

வழக்கறிஞர்கள்தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள் அற்ப காரணங்களுக்காக கோர்ட் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். இங்குள்ள வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மிகவும் செல்வாக்குமிக்கவர்களாக உள்ளனர். சங்கம் சார்பாக நடக்கும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானவை. சிலர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்‌. சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடும்போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

இத்தகைய சட்டவிரோத நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், மரியா கிளெட் ஆகியோர், ‘‘வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவே, சரியான முறையாகும். வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது. நீதிமன்றங்களின் மகத்துவத்தை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்களுக்காக அல்லது எந்தவொரு வழக்கறிஞரின் சில தனிப்பட்ட குறைகளின் அடிப்படையில் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

ஏதேனும் பொதுவான காரணம் ஏற்பட்டால் மட்டுமே, பார் கவுன்சிலையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையோ அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்‌. அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள். நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்திற்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர், திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர், முகவரியை குறிப்பிட்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுக்கும்பட்சத்தில், தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

 

The post வழக்கறிஞர்கள்தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள் அற்ப காரணங்களுக்காக கோர்ட் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jim ,Nellai ,Court ,Tirunelveli District Combined Court ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...