சென்னை: பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.6.04 கோடி செலவில் 50 குடிநீர் ஏடிஎம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த ஏடிஎம்களில் பொதுமக்கள் இலவசமாக சுத்தமான தண்ணீரை பெறலாம். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலமாக பெருநகர சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி (ஏடிஎம்) குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவி பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களான பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், வணிக பகுதிகள், ரயில் நிலையங்கள், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை என 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரங்களை 3 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிப்பதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.6.04 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கும் விதமாக சென்னை, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, குடிநீரை அருந்தினார்.
இந்த தானியங்கி குடிநீர் இயந்திரங்களுக்கு குடிநீர் விநியோக குழாயில் இருந்து 3,000 லிட்டர் முதல் 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எச்டிபிஇ சின்டெக்ஸ் டேங்குகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும் புறஊதாக் கதிர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு துரு பிடிக்காத சில்வர் டேங்குகளில் சேகரிக்கப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் 1 லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன LoT மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறையை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் குடிநீர் அளவு குறையும்போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தபடுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் கவுரவ் குமார், மண்டல குழு தலைவர் மதன்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் ரூ.6.04 கோடியில் 50 குடிநீர் ஏடிஎம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
