- தூத்துக்குடி
- மதுரை
- திருச்சி
- சேலம்
- கிறிஸ்துமஸ்
- புதிய ஆண்டு
- பெங்களூர்
- திருவனந்தபுரம்
- சென்னை
- சென்னை விமான நிலையம்
- தூத்துக்குடி
* பெங்களூரு, திருவனந்தபுரம் வழியாக சுற்றி செல்லும் நிலையால் பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் இல்லாததால் பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் விமான டிக்கெட்டுகள், அதிகமான பயண நேரங்கள் காரணமாக பயணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில் நேற்றும், இன்றும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால் திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன.
எனவே, சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியது உள்ளது. எனவே, கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
* கட்டணம் விவரம்
வழக்கமானது சுற்றி செல்வதால்
சென்னை-தூத்துக்குடி ரூ.4,100 பெங்களூரு வழி ரூ.13,400
சென்னை-திருவனந்தபுரம் ரூ.5,173 பெங்களூரு வழி 17,331
சென்னை-மதுரை ரூ.4,248 பெங்களூரு வழி ரூ.13,160
சென்னை- திருச்சி ரூ.4,121 பெங்களூரு வழி ரூ.13,842
சென்னை- சேலம் ரூ.3,093 பெங்களூரு வழி ரூ.8,688
சென்னை- கோவை ரூ.4,147 நேற்று, இன்று ரூ.8,448
