×

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக தொழிலாளர்கள் இருவர் மீட்ககோரி உருக்கமான வீடியோ

கடையநல்லூர்: மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கடையநல்லூரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் தங்களை விரைந்து மீட்கக் கோரி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலியில் ஆயுதம் ஏந்திய ஜிகாதி தீவிரவாத படைகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கு சில மாதங்களாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாலியின் மேற்கு பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில் தனியார் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்களான தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர், கடந்த நவ.6ம் தேதி கடத்திச் சென்றனர். இதனையடுத்து தலைநகர் பமாகோவிலிருந்து அந்நிறுவனத்தின் இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 5 பேரில் இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் முருகேசன் மகன் தளபதி சுரேஷ் (26), கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் இசக்கிராஜா (36) என்பது தெரியவந்தது. இசக்கிராஜாவுக்கு மனைவி பிரவீனா, ஒரு மகன், மகள் உள்ளனர். தொழிலாளர்கள் இருவரையும் மீட்க உறவினர்கள் கடந்த ஒரு மாதமாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடத்தப்பட்ட இருவரும் நேற்று வீடியோ வெளியிட்டுள்ளது குடும்பத்தினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து தளபதி சுரேசும், இசக்கிராஜாவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களை சிலர் நவம்பர் 6ம்தேதி இரவு 8.38க்கு கடத்திச் சென்றதாகவும், பலமுறை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும் நிறுவனம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தங்களை விரைந்து மீட்க உரிய நடவடிக்கைகளை உறவினர்கள் மேற்கொள்ள வேண்டும் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர். தங்களை வேலைக்கு அழைத்து சென்ற புளியரையைச் சேர்ந்தவர் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Mali ,Kadayanallur ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை