×

சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் பள்ளிகள் விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 10ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் கீழ் வகுப்புகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடந்தன. நேற்றுடன் தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து இன்று முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் ஜனவரி 5ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை 12 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிறஸ்துமஸ் பண்டிக்கை 25ம் தேதியும், 2026ம் ஆண்டு பிறப்பு ஜனவரி 1ம் தேதியும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், பொதுமக்கள் வெளியூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பள்ளிக்கு வரச்சொல்வதும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் (சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற வாரியங்கள் தவிர) அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்:
* விடுமுறை நாட்கள் மாணவர்கள் நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்ககூடாது.
* மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம்.
* விடுமுறை நாட்களில் இசை, நடனம், மற்றும் ஓவியம் போன்ற கலை ஆர்வம் உள்ள மாணவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
* பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள பொது நூலகங்களில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு புத்தகங்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்தலாம்.
எனவே அனைத்து வகை தனியார் பள்ளிகளின் முதல்வர்களும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Chennai ,Directorate of Private Schools ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...