×

வேலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்த குரூப்-1 பதவிக்கு முதல்நிலை தேர்வை 3,618 பேர் எழுதினர் 1267 பேர் ஆப்சென்ட்

வேலூர், ஜூன் 16: வேலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்த குரூப்-1 பதவிக்கு முதல்நிலை தேர்வை 3,618 பேர் எழுதினர். 1267 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப்1, 1ஏ தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலை பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக 72 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்1, 1ஏ முதல்நிலை தேர்வுகள் ஜூன் 15ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்1, குரூப்1ஏ முதல்நிலை தேர்வை எழுத 4,885 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, ஓட்டேரி செவன்த்டே பள்ளி, வேலூர் டான்போஸ்கோ பள்ளி, விருபாட்சிபுரம் தேசியா மெட்ரிக்ப்பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேக தீபம் மெட்ரிக் பள்ளி, வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி உட்பட சன்பீம் பள்ளிகளில் 18 மையங்கள் அமைக்கப்பட்டது.
தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வர தொடங்கினர். முதலில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கி தேர்வு 9.30 மணிக்கு தொடங்கியது. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முறைகேடுகள் தடுக்கும் வகையில் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. 9 மணிக்கு பிறகு வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் காலதாமதம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குரூப்1 தேர்வை கலெக்டர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று நடந்த குரூப் 1 தேர்வை 3 ஆயிரத்து 618 பேர் எழுதினர். 1,267 பேர் தேர்வு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்த குரூப்-1 பதவிக்கு முதல்நிலை தேர்வை 3,618 பேர் எழுதினர் 1267 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Absent ,Vellore district ,Tamil Nadu Public Personnel Selection Board ,TNPSC ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் ரூ.23 லட்சம் ஆன்லைனில்...