வேலூர், டிச.31: வேலூரில் போக்சோ வழக்கை சரியாக விசாரிக்காத 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 போலீசாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 6 போலீசாருக்கும் மெமோ வழங்க எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேலூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த 2022ம் ஆண்டு 15 வயது சிறுமியை சிலர் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளியதாக சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இந்த போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காத அப்போதைய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், வாசுகி, எஸ்ஐ சத்தியவாணி, வேலூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷியாமளா மற்றும் போலீசார் தமயந்தி, ஜெயசுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷனில் சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மனுவை விசாரித்த மனித உரிமைகள் கமிஷன், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல், அனைத்து மகளிர் போலீசார் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மனித உரிமையை மீறி உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, ரூ.9 லட்சம் தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். அந்த தொகையை கடந்த 2022ம் ஆண்டு வழக்கை விசாரித்த 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் எஸ்ஐயிடமிருந்து தலா ரூ.2 லட்சமும், போலீசார் 2 பேரிடம் தலா ரூ.50 ஆயிரம் வசூலிக்க வேண்டும். மேலும், டிஎஸ்பி பதவியிலான அதிகாரி இந்த வழக்கை மீண்டும் விசாரித்து 3 மாதத்திற்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், வாசுகி, ஷியாமளா மேலும், எஸ்ஐ சத்தியவாணி, போலீசார் தமயந்தி, ஜெயசுதா ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை கமிஷன் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மெமோ வழங்கவும், அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வேலூர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
