வேலூர், டிச.31: காட்பாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 5ம் தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது: ராணுவ ஆட்சேர்ப்பு சார்பில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடமான மாவட்ட விளையாட்டு வளாகம் காட்பாடியில் அதிகாலை 12.30 மணி முதல் காலை 10 மணி வரை ஒரு டிஎஸ்பி, 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் காலை 9 மணி முதல் சோதனைகள் முடியும் வரை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 10 கான்ஸ்டபிள்கள் ஒவ்வொரு நாளும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மைதானத்திற்குள் உள்ள சுற்றுச்சுவர்களுக்கு 20 எண்ணிக்கையிலான போலீஸ் தடுப்புகள் மற்றும் ஓடுபாதையின் முடிவு கோட்டில் நான்கு நகரக்கூடிய தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
ராணுவ ஆட்சேர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள வரும் தேர்வர்களுக்கு குடிநீருக்கான 2 சின்டெக்ஸ் டேங்க் (1000 லிட்டர் கொள்ளளவு) ஏற்படுத்த வேண்டும். பல்வேறு இடங்களில் 6 குடிநீர் விநியோகிப்பான்கள் வைக்கப்பட வேண்டும். ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் மற்றும் மொபைல் கழிப்பறைகளை மாநகராட்சி முலம் ஏற்படுத்தி தர வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீ அணைப்பானுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஆட்சேர்ப்பு நடைபெறும் இடத்தில் போதுமான நாற்காலி மற்றும் மேசைகள், பெடஸ்டல் பேன், பந்தல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்களான மடிக்கணினிகள், லேசர்ஜெட் பிரிண்டர்ஸ், டூபிளக்ஸ் பிரிண்டர்ஸ் ஆகியவற்றை போதுமான அளவில் வைத்து கொள்ள வேண்டும். ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடங்களில் போதுமான அளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும் ஆட்சேர்ப்பு நடைபெறும் இடத்தில் மைதானத்தை சுற்றி போதுமான மின்விளக்குகளை ஏற்பாடு செய்தல் வேண்டும். ராணுவ வீரர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயசித்ரா, ஆர்டிஓ செந்தில்குமார், கர்ணல் வாசிம் அகமது, சுபேதார் அனுப்குமார், நாய்க்கர் சுபேதார் தர்மேந்திர குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
