×

பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஆசிரியர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5000 லஞ்சம் கொடுக்க முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவரின் இல்லத்தில் நேற்று குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது சந்திரகாந்த் வைஷ்ணவ் என்ற ஆசிரியர் வந்திருந்தார். ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடத்திட்ட குழுவில் தன்னை சேர்க்க கோரி அமைச்சரிடம் எழுத்து மூலம் மனு அளித்தார்.மனுவுடன் இனிப்பு பெட்டி மற்றும் ரூ.5000 பணம் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சரின் உதவியாளர் அமைச்சரிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அமைச்சர் புகாரையடுத்து ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். தன்னுடைய மாணவ பருவத்தில் இருந்தே பாஜ இளைஞர் அணி மற்றும் சங்க பரிவாரங்களில் இணைந்து பணியாற்றியுள்ளதாக தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மதன் திலாவர் கூறுகையில்,‘‘கல்வி அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்து காரியங்களை செய்து விடலாம் என்று சிலர் நினைப்பது வேதனையான ஒன்று. என்னுடைய 36 ஆண்டு அரசியல் வாழ்வில் முதல்முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்’’ என்றார்.

 

The post பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Education Minister ,Jaipur ,State ,Madan Dilawar ,Chandrakant Vaishnav ,
× RELATED இன்ஸ்பெக்டர் வீட்டில் பெண் குளிப்பதை...