×

நகைக் கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா.வினர் மனு

ஈரோடு : பொதுமக்கள் வங்கிகளில் நகைக் கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு, மாநகர் மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நேற்று, ஈரோடு, பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நகைக் கடனை பெற்றவர்கள் அசல் மற்றும் வட்டி என இரண்டையும் ஒருசேர செலுத்தி நகையை மீட்டு, மீண்டும் அடமானம் வைப்பது, அடமானம் வைக்கும் நகைகளுக்கான ரசீது போன்ற விதிமுறைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், நகைகளுக்கான ரசீது என்பது சமீபத்தில் நகை வாங்கியவர்களுக்கு சாத்தியமாகும். ஆனால், பாரம்பரியமாக பழைய நகைகளை வைத்திருப்பவர்களுக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
இதனால், பொதுமக்களும், வியாபார,தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று, நகைக் கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று (நேற்று) மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரிடம் மனு அளித்துள்ளோம்.

எங்கள் தலைவர் ஜி.கே.வாசனும் ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.ரிசர்வ் வங்கி எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வங்கிகளின் முன்பு போராட்டம் நடத்தவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post நகைக் கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா.வினர் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress Party ,Reserve Bank ,Erode ,Dinakaran ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...