×

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் மற்றும் பணிமாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கி, செவிலியர்களுக்கான பணிமூப்பு பட்டியலினை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று 169 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை 4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமிருக்கும் 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களில், விரைவில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் காலிப்பணியிடங்களாக இதுவரை கண்டறியப்பட்ட 169 பணியிடங்களும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-2, போதகர் போன்ற பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு அதன்மூலம் 400 பணியிடங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்குவது என்கின்ற வகையிலும் சுமார் 1,000 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு விரைவில் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் ஆணை வழங்கப்பட உள்ளது. இன்று 169 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 1 வருட காலமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது எம்ஆர்பி செவிலியர்களுக்கும் அத்தகைய மகப்பேறு விடுப்பு வழங்கும் வகையில் அரசாணை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது. தற்காலிக செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ.14,000 ஆக இருந்ததை நமது முதல்வர் ரூ.18,000 ஆக உயர்த்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pongal ,Minister ,M. Subramanian ,Chennai ,Minister of Health and Public Welfare ,Directorate of Medical and Rural Welfare ,Teynampet, Chennai ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி