சென்னை: தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் ரயில் பெட்டியில் குழந்தைகளுடன் அவசரமாக ஏறும்போது ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்த பெண் ஆர்பிஎப் காவலரால் மீட்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில், தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் ரயிலில் நேற்று காலை ஏறுவதற்காக காத்திருந்தார். ரயில் நடைமேடையை விட்டு நகர தொடங்கியபோது, பிரமிளா தனது குழந்தைகளுடன் அவசரமாகப் பெட்டியில் ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர், ரயிலுக்கும் பிளாட்பார்மிற்கும் இடையே இருந்த இடைவெளியில் தவறி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் காவலர் தயாநிதி, நொடிப் பொழுதும் தாமதிக்காமல் உடனடியாக தனது விசிலை ஊதி ரயிலை நிறுத்தச் சைகை காட்டினார். ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், சக்கரங்களுக்கு இடையே சிக்க இருந்த பிரமிளா நூலிழையில் உயிர் தப்பினார்.
இதை தொடர்ந்து, ரயிலுக்கு அடியில் சிக்கியிருந்த அவரை மீட்ட தயாநிதி மற்றும் அங்கிருந்த பயணிகள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் தயாநிதியின் துணிச்சலான செயலை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் சக அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். மேலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் இந்த காவலருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நல்வாய்ப்பாக பிரமிளாவின் குழந்தைகளும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
