×

அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்

ஊத்துக்கோட்டை, மே 23: ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியம், தாமரைக்குப்பம் ஊராட்சியில் 40 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இப்பகுதியில் 6 வழிச்சாலை பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக, ஏரியில் இருந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரி மூலம் மண் ஏற்றிச் செல்கின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு மண் எடுப்பது மட்டுமல்லாமல், அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மண் எடுத்துக்கொண்டு, கிருஷ்ணா கால்வாய் மீது லாரிகள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால், கால்வாய் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தபோது, அங்கு வந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கிருஷ்ணா கால்வாய் மீது லாரிகள் செல்வதற்கு தடை விதித்திருந்தனர். ஆனால், அதிகாரிகளின் உத்தரவை மீறி மீண்டும் லாரிகள் செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மீது லாரிகள் செல்லாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Krishna canal ,Uthukkottai ,Thamaraikuppam panchayat ,Ellapuram ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்