×

இத்தாலி ஓபன் அரையிறுதியில் மின்னலாய் மின்னிய சின்னர்: பைனலில் அல்காரசுடன் மோதல்


ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் நேற்று, உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவர், இன்று நடக்கும் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை எதிர்கொள்வார். இத்தாலியின் ரோம் நகரில், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன் இறுதிக் கட்டம் நெருங்கி வரும் நிலையில், காலிறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை வென்று உலகின் முதல் நிலை வீரரும், இத்தாலியை சேர்ந்தவருமான ஜானிக் சின்னர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அதேபோல், மற்றொரு காலிறுதியில் போலந்து வீரர் ஹியுபர்ட் ஹர்காக்சை வீழ்த்திய அமெரிக்க வீரர் டாம்மி பால், அரை இறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், ஜானிக் சின்னரும், டாம்மி பாலும் நேற்று நடந்த அரை இறுதிச் சுற்றில் மோதினர். இப் போட்டியின் துவக்கத்தில் அபாரமாக ஆடிய பால், எளிதில் முதல் செட்டை வசப்படுத்தினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆடிய சின்னர், ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் அந்த செட்டை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை சிறப்பாக ஆடிய சின்னர் மீட்டெடுத்தார்.

அதனால், 1-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் பாலை வென்ற சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரும், ஸ்பெயினை சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரசுடன் ஜானிக் சின்னர் மோதவுள்ளார். சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றும் வீரருக்கு 1000 புள்ளிகளும், ரூ.9.35 கோடி பரிசும் கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, 650 புள்ளிகளும் ரூ.4.97 கோடி பரிசும் வழங்கப்படும்.

The post இத்தாலி ஓபன் அரையிறுதியில் மின்னலாய் மின்னிய சின்னர்: பைனலில் அல்காரசுடன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Cinner ,Italian Open ,Alcaraz ,Rome ,Janik Cinner ,Carlos Alcaraz ,Italy ,Rome… ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...