×

பிளஸ் 2 தேர்வில் 600க்கு 599 பழநி மாணவி ஓவியாஞ்சலி மாநிலத்தில் முதலிடம்: ரிசர்வ் வங்கி அதிகாரி ஆவதே லட்சியம் என பேட்டி

பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாவட்டம், பழநி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணினி பயன்பாடு பிரிவை சேர்ந்த இம்மாணவி ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ், பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவியை பள்ளியின் செயலர் குப்புச்சாமி, பள்ளி முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள், பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.
முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலி கூறுகையில், ‘‘ புத்தகம் மட்டுமின்றி, வாட்ஸ்அப் செயலி, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் உதவியுடன் என்னுடைய கல்வியறிவை மேம்படுத்தி கொண்டேன். பி.ஏ பொருளாதாரம் படித்து விட்டு போட்டி தேர்வில் பங்கேற்று ரிசர்வ் வங்கி அதிகாரியாக ஆவதை லட்சியமாக கொண்டுள்ளேன்’’ என்றார்.

முதல்வர், துணை முதல்வர் செல்போனில் வாழ்த்து பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலியை பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் நெய்க்காரப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தி புத்தகங்கள், கைக்கடிகாரம் ஆகியவற்றை பரிசாக வழங்கினார். அப்போது ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏவின் செல்போன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓவியாஞ்சலியிடம் பேசினார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்து மாணவியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மாணவி ஓவியாஞ்சலி கூறுகையில், ‘‘முதல்வர் என்னிடம் அடுத்தகட்டமாக மேல்படிப்பு குறித்து கேட்டறிந்தார். பட்டப்படிப்பு முடித்து போட்டி தேர்வில் பங்கேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆவதே எனது லட்சியம் என தெரிவித்தேன். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி, லட்சியம் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறினார். முதல்வர் பாராட்டியது பேரின்பமாக உள்ளது’’ என்றார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் செல்போன் மூலமாக பேசி வாழ்த்து தெரிவித்தார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓவியாஞ்சலியை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

 

The post பிளஸ் 2 தேர்வில் 600க்கு 599 பழநி மாணவி ஓவியாஞ்சலி மாநிலத்தில் முதலிடம்: ரிசர்வ் வங்கி அதிகாரி ஆவதே லட்சியம் என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Palani ,Oviyanjali ,Reserve Bank ,Palani Bharat Vidya Bhavan School ,Dindigul ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...