தர்மசாலா: ஐபிஎல் தொடரில், தர்மசாலாவில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. பிரப்சிம்ரன் 91 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில், தர்மசாலாவில் நேற்று நடந்த 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு செய்தது. பஞ்சாப் அணியின் பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரிலேயே, மயங்க் யாதவிடம் கேட்ச் கொடுத்து பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஷ் அதிரடி காட்டினார். ஆனால், ஆகாஷ் சிங் பந்து வீச்சில், டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து 30 (14 பந்து) ரன்னில் வெளியேறினார். பின்னர், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன் குவித்தது. நிதானமாக ஆடிய பஞ்சாப் 10 ஓவர் முடிவில் பஞ்சாப் 100 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். திக்வேஷ் வீசிய 13வது ஓவரில், ஸ்ரேயஸ் அய்யர், மயங்க் யாதவிடம் கேட்ச் கொடுத்து 45(25 பந்துகள்) ரன்னில் வெளியேறினார். பின்னர், வந்த நேஹல் வதேரா 16 ரன்னுடன் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த ஷஷாங்க் சிங்அதிரடி காட்டினார். ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் கிடைத்தது. பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங் ஜோடி, 18 பந்துகளில் 51 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் 19வது ஓவரில், திக்வேஷ் பந்து வீச்சில், பிரப்சிம்ரன் சிங் 91 ரன்னில் (48 பந்து, 7 சிக்சர், 6 பவுண்டரி) நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 7 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசினார். ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
The post லக்னோவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 236 ரன் குவிப்பு: பிரப்சிம்ரன் சிங் அசத்தல் appeared first on Dinakaran.
