புதுடெல்லி: இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் ஆடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 11ம் தேதி, குஜராத்தின் வதோதரா நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது.
போட்டியை காண ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளதால், விற்பனை தொடங்கிய 8 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டி வரும் 14ம் தேதி, ராஜ்கோட்டிலும், 3ம் போட்டி 18ம் தேதி, இந்தூரிலும் நடைபெற உள்ளன. தவிர, டி20 போட்டிகள், வரும் 21, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒரு நாள் போட்டிகளில், இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆடவுள்ளனர்.
