×

ஆப்கோன் கால்பந்து த்ரில்லாக நடந்த போட்டியில் தில்லாக வென்ற ஐவரிகோஸ்ட்: 3 கோல் வாங்கி கேபான் சரண்டர்

ரபாட்: ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, ஐவரிகோஸ்ட் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் கேபான் அணியை வெற்றி கண்டது. ஆப்ரிக்க நாடுகளின் அணிகள் மோதும் ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் மொராக்கோவின் ரபாட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த குரூப் ஸ்டேஜ் போட்டி ஒன்றில் ஐவரிகோஸ்ட் – கேபான் அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் கேபான் அணி வீரர்கள் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்தி கோல் போட முனைப்பு காட்டினர்.

அந்த அணியின் குவெலர் காங்கா, போட்டியின் 11வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேபான் அணியின் டெனிஸ் புவாங்கா 21வது நிமிடத்தில் 2வது கோல் போட்டு வலுவான அடித்தளம் அமைத்து தந்தார். இருப்பினும், அதன் பின் ஆக்ரோஷம் காட்டிய ஐவரிகோஸ்ட் அணி வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல்கள் போட தீவிரம் காட்டினர்.

போட்டியின் 44வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் வீரர் ஜீன் பிலிப் கிராஸோ முதல் கோல் போட்டார். பின், 84வது நிமிடத்தில் இவான் கெஸாண்ட், 90+1வது நிமிடத்தில் பஸோமானா டோரி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டனர். அதன் பின் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், 3-2 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்ட் வெற்றி வாகை சூடியது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கேமரூன், மொசாம்பிக் அணிகள் மோதின.

போட்டியின் 23வது நிமிடத்தில் மொசாம்பிக் வீரர் கெனி கேடாமோ முதல் கோல் போட்டார். அதன் பின் சிறப்பாக ஆடிய கேமரூன் வீரர்கள் நெநே 28வது நிமிடத்தில் முதல் கோலும், கிறிஸ்டியன் கோபானே 56 நிமிடத்தில் 2வது கோலும் போட்டனர். அதையடுத்து இரு அணி வீரர்களாலும் கடைசி வரை கோல் போட முடியவில்லை. எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் கேமரூன் வெற்றி பெற்றது.

Tags : Ivory Coast ,Afcon ,Gabon ,Rabat ,Afcon football championship ,Rabat, Morocco ,
× RELATED 2026ல் இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிஸி:...