×

மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்கு பதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

மாஸ்கோ: மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். 2ம் உலகப் போரின் 80ம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தின அணிவகுப்பு ரஷ்யாவில் மே 9ம் தேதி நடைபெறுகிறது. வெற்றி விழாவை ஒட்டி, போரில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்தைப் போற்றி கவுரவிக்கும் விதமாக, மாஸ்கோவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இந்த போரில் நாஜி ஜெர்மனியை ரஷ்யா வென்றதன் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெறும் ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

பிரதமர் மோடிக்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் கலந்து கொள்வார் என்று ரஷ்யாவிடம் இந்தியா தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பிரதமரின் இந்த முடிவிற்கான காரணத்தை ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றாலும், பஹல்காம், தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி தின பேரணியில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்கு பதில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajnath Singh ,Moscow Victory Day ,PM Modi ,Moscow ,Defence Minister ,Modi ,Victory Day ,World War II ,Russia ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை