×

இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை: காங்கிரஸ் தலைவர்களுக்கு பவன் கல்யாண் பதிலடி

ஐதராபாத்: இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் பதிலடி கொடுத்துள்ளார். பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவத்தில், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகள் போரை தூண்டுவதாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள், குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மூத்த தலைவர் சைபுதீன் சோஸ் போன்றோர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துகளை கூறினர். சைபுதீன் சோஸ் அளித்த பேட்டியில், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள்; பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தக் கூடாது’ என்று வலியுறுத்தினார். அதேபோல் சித்தராமையா அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை; கடுமையான நடவடிக்கைகள் போதும்’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடந்ததால் சித்தராமையா பின்னர் தனது கருத்தை தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால், இந்தியாவை விட்டு வெளியேறி அந்த நாட்டில் வாழுங்கள். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா தாக்கப்படும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்பது ஏற்கத்தக்கதல்ல. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது வெட்கக்கேடு. பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டபோது, சில காங்கிரஸ் தலைவர்கள் டிவி விவாதங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு என்ன பயன்? மதச்சார்பின்மை என்ற பெயரில் பாகிஸ்தானை ஆதரிப்பது தவறு; இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள்? பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நீர் நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’ என்று அச்சுறுத்தி உள்ளார். மூன்று போர்களில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை நினைவூட்ட வேண்டும். தேவைப்பட்டால், ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவுக்காக ரத்தம் சிந்த தயார்’ என்று கூறினார்.

The post இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை: காங்கிரஸ் தலைவர்களுக்கு பவன் கல்யாண் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Bhavan Kalyan ,Congress ,Hyderabad ,Deputy ,Pakistan ,India ,Pahalkam ,
× RELATED சொல்லிட்டாங்க…