×

கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் பயோ மெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.29: பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கத் தவறியவர்கள், கோடை விடுமுறையில் அதை செய்து முடிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024-25ம் கல்வியாண்டில் ஜூன் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால்,

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதவிர புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களிடமும் பள்ளியில் சேரும்போதே இந்த பணிகளை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் பயோ மெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Vellore ,Directorate of School Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...