×

சிவகங்கை புறவழிச்சாலையில் தார்ச்சாலை பணிகள் வேகம் எடுக்குமா?.. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஏப்.26: சிவகங்கை புறவழிச்சாலையில் தொண்டி சாலை முதல் பனங்காடி சாலை வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத் தலைநகரான சிவகங்கை வழியே மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்தூர் சாலை, மானாமதுரை சாலை என முக்கியச் சாலைகள் செல்கின்றன. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்பத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை போடப்பட்டது. மற்றொரு புறவழிச்சாலையான திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் தொடங்கப்படவில்லை.

இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும். இந்த சாலை காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர், ஆயுதப்படை குடியிருப்பு வழியாக வாணியங்குடி வந்தடையும். சுமார் 10.6 கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கிறது. இச்சாலைப்பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
காஞ்சிரங்கல் ஊராட்சி பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு, முதற்கட்டமாக, மொத்தம் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலை நகர் முதல் ஆயுதப்படை குடியிருப்பு வரை நிலப்பகுதிகள் சுத்தம் செய்தல், உயரப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டு காஞ்சிரங்கால் முதல் தொண்டி சாலை இணைப்பு வரை தார்ச்சாலை போடப்பட்டது.

தொண்டி சாலை இணைப்பு முதல் பனங்காடி சாலை இணைப்பு வரை சாலை அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்னும் தார்ச்சாலை மட்டும் போடப்படவில்லை. இச்சாலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட கூடுதலான வாகனங்கள் செல்வதால் அதிகமான தூசிகள் வெளியாகிறது. இதனால் டூவீலரில் செல்பவர்கள், சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் விரைந்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தார்ச்சாலை அமைக்காததால் அதிகப்படியான தூசிகள் வருகிறது. இதனால் இந்த சாலையில் டூவீலரில் செல்ல முடியவில்லை. விரைந்து தார்ச்சாலை பணிகளை முடிக்க வேண்டும். இச்சாலையின் தொடர்ச்சியான ரயில்வே மேம்பாலப்பணிகள் மற்றும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சிவகங்கை புறவழிச்சாலையில் தார்ச்சாலை பணிகள் வேகம் எடுக்குமா?.. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga Bypass ,Sivaganga ,Thondi Road ,Panangadi Road ,Madurai ,Thondi National Highway ,Tirupattur Road ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்